Search This Blog

Tuesday, December 8, 2009

தமிழனுக்கொரு மாயலோகம்...!

தமிழ்த் திரையுலகக் கூத்தாடிகள்
அரங்கேற்றிய இன்னொரு மெகா ஷோ
முன்னனி தொலைக்காட்சியொன்றில்
பொறுக்கிகளையும், சல்லிப்ப்பயல்களையும்...
மார்புப் பிளவுகளையும் தேவையெனில்
குறி தவிர்த்துப் பெருந்தொடைகளையும்
திறந்து காட்டும் சதைப்பிண்டங்களையும்
ஒருசேரக் காணும் பாக்கியம் தமிழனுக்கு!
பளபள உடைகளின் பின்னாலிருக்கும்
எதுவும் தெரியாமல்தான் தமிழனை
வைத்திருக்கிறார்கள் கலைஞர்கள்!
கந்தைத்துணியுடுத்தி
சோத்துக்கு சிங்கியடிக்கும்
தமிழச்சிகளை இவர்களின் பருத்த  மார்புகளும்
வழுவழுத்தொடைகளும்
வண்ண உதடுகளும் தொப்புள் வளையங்களும்
பெரும் மாயலோகத்தில் சஞ்சரிக்க வைக்கிறது.
சந்ததி குறித்து கவலை வேண்டாம்.
சாப்பாட்டுக்கவலை வேண்டாம்
ரெண்டு ரூபாய் அரிசிக்கஞ்சி குடித்து
காலம்முழுக்க கடந்தால் போதும்.
இலவசப் புடவை பெற்று
இடுப்பு மறைத்தால்  போதும்.
கூலிக்குக்கொடுத்த காசை திரும்பப்பெற
அரசுக்கு இருக்கு டாஸ்மாக்.
பசி மறப்பான் பட்டினி மறப்பான்
பாவித்தமிழன்  தனை மறந்து.
விபச்சாரம் செய்யும் புவனேஸ்வரிகளையும்
யூனிட் அழைக்கையில் கக்கூஸ் போகும்
திரிஷாக்களையும்
மார்புகளில் புற்று வரலாம் என்கிற
நமீதாக்களையும், மாளவிகாக்களையும்
இன்ன பிற மினுக்கு மேனிகளையும்
எய்ட்சும் தாக்கலாம், எமனும் தாக்கலாம்.
போடா தமிழா, வேலையைப்பார்.
எல்லாப்பயல்களுக்கும் எல்லாத்தையும் காட்டும்
இவர்களைத்தெரியாமல்தான்
முருகேசன் கையைப்பிடித்தான்
என்பதற்காய்
தூக்குப்போட்டு செத்துப்போனாயோ அஞ்சலை?!!!!


அன்புட‌ன்
ப‌.ம‌திய‌ழ‌க‌ன்

சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது 

Thursday, November 19, 2009

மழை

மழை பெய்து ஓய்ந்த தருணங்களின்
பின்னான உன் வருகையால்
மென் வெப்பம் நீங்கி அறையெங்கும்
குளிர்மை நிரம்புகிறது.
கணஇருள் படர்ந்திருக்கும் அறையின்
சுவற்று மாடமொன்றில்
சிறுவிளக்கேற்றி
மெல்லொளியில் உன் முகம் தேடுகிறேன்.
எச்சலனங்களையும் காட்டாத உன் முகம்
வாழ்ந்த காலங்களில் இருந்ததைப் போலவே.
மீண்டும் அடித்துச் சீறுகிற மழையின் பேரிரைச்சலும்
பேய்க்காற்றின் ஓலமும்
சன்னலுக்கு வெளியே செவிகள் துளைக்க...
குறுநகையொன்றை உதிர்த்துவிட்டு என்
கண்களை நோக்கும் உன்னை
எதிர்கொள்ளமுடியாமல்
பின்வாங்குகிற ஒவ்வொரு பொழுதும்
மன்னிப்புக்கோருவதாய் எண்ணி
கரம் பற்ற எத்தனிக்கும் ஒவ்வொரு நொடியிலும்
திடுமென மறைகிறாய்...
மழை நின்ற நேரத்தில்
அறை மீண்டும் அமைதி பெறுகிறது.
--
அன்புட‌ன்
ப‌.ம‌திய‌ழ‌க‌ன்

Monday, November 2, 2009

முன்தலையின் வகிட்டில்

செந்தூரமிட்டு

கணவனின் உடம்பு மீது கால்களைபோட்டுக்கொண்டு

ரயில் பயணத்தின் அசதியில் உறங்குகிற பெண்

ஒருக்கால்

காலை எழுந்தவுடன்

தினப்படிக்கு

அவனைத் தொழுபவளாக இருக்கலாம்!

ரயில்

ஓடி வந்த களைப்பை
பெருமூச்செறிந்து சொன்னது ரயில்.
தீனிப்பண்டங்கள் விற்பவர்கள்
உரத்துக்கூவுகிறார்கள். வயிற்றுப் பிழைப்பு.
இனியெப்போதும் சந்திக்க வாயிப்பில்லாத
ஆயிரமாயிரம் முகங்கள்
ஏதேதோ நினைப்புகளுடன்
பிரிகின்றன நிலையத்தை விட்டு.
மாலை நேர நடையை
தொப்பைகளும், குண்டுப்பெண்களும்
வழக்கமாக்கிக் கொள்கிறார்கள்.
இருட்டிக்கொண்டு வருகிற
சூழலைப் பொருட்படுத்தாமல்
ப்ளாட்பாரத்தின் நால்வர் இருக்கையில்
அமர்ந்தபடி
கடல் கடந்த தேசத்திலிருக்கும் மகனையோ,
மகளையோ நினைத்து மனமுருகி
ஏக்கப்பெருமூச்சுகளோடு ஆகாசத்தையும்
நீண்டு போகும் தண்டவாளங்களையும்
பார்த்தபடியிருப்பார்கள்
வயதான தம்பதியர்.
அடுத்தடுத்த காட்சிகளை நோக்கி
மீண்டும் கிளம்பும் ரயில்

Thursday, October 8, 2009


இப்படியும் அப்படியும் என்று
திரும்பித் திரும்பிப் பார்த்தான். சோம்பித் தெரியும் கைகளை
சற்று வலிமைப்படுத்தி
பார்வையை நேரமைத்து
முகத்தை லேசாய்ச் சாய்த்து
செதுக்கிய உதடுகளில் சற்று
சிரிப்பை வரவழைத்து...
என மனத்தினால்
தூரிகையைத் துன்பப்படுத்தி
எழுதிய ஓவியம்
பிடிக்காமலே போய்விட்டது கடைசீயில்.
மீண்டும் மீண்டும் அழித்தெழுதி
வரைகிறான்
ஒரு கவிதையாய் வரும் வரைக்கும்!

-அன்புட‌ன்ப‌.ம‌திய‌ழ‌க‌ன்

நதி என்று...

வற்றிய மணற்பரப்பாகவே எப்போதுமிருக்கிறது.
பேருந்துப் பயணங்களின்போது
இவற்றைக் கடக்கையில்
இதுதான் நதி என்று பிள்ளைகளுக்கு
அறிமுகம் செய்ய மனமில்லை.
நகரத்தில் சாக்கடை வடிகாலாக ...
எங்காவது தேங்கி நிற்கும் நீர் நிலைகளில்
நகரத்து வாசிகளின் உடைகளை
வெண்மையாக்கித் தருகிறான் துவைப்பவன்!
சிற்றூர்களில் கழிப்பிடங்களாக...
கரைமேலிருக்கிற வயற்பரப்புகள்
காரித்துப்புகின்றன மனித முகங்களில்.
நேற்றொரு பேருந்துப் பயணத்தில்
நதியைக் கடக்கையில்
நதியின் சாக்கடையில் நாய்கள் சில
துள்ளித்துள்ளி விளையாடிக்கொண்டிருந்தன.
நதியைப் பற்றி
நாய்களுக்கென்ன
கவலை இருக்க முடியும்?
--
அன்புட‌ன்ப‌.ம‌திய‌ழ‌க‌ன்

முத்தி என்றொரு ஆங்காரி

முத்திக்கிழவி எதற்கெடுத்தாலும் கத்துவாள்.
ஊர்க்கோடி கந்தர் ஊட்லதான்
ஒரு ஓரமாகுடியிருந்தா. பறச்சி.
காசு வருதுன்னு வச்சிருந்தார்
கந்தசாமிக்கோனார்.
பள்ளிக்கூட பசங்க கல்லெறிவாங்க அவமேல.
மானாவாரியா திட்டுவா
அப்பா அம்மா எல்லோருடையபரம்பரையும்
கரிபூசிக்கும் மூஞ்சில.
காட்டுல வறட்டி பொறுக்கி
கருப்பங்கட்ட தட்டி
காயவைப்பாள்
கந்தர் வூட்டுக்கும் சேர்த்து
பரண் கட்டி வைப்பாள்.
அப்பிய காத்தியக்கி
அலுங்காம அடுப்பெரிக்கும்
கந்தர் வூடு.
குட்டையில் மீன் பிடிப்பாள்
கருவாடு விற்பாள்
சமயத்தில் பிச்சையும் எடுப்பாள்
எழுவது வயசிலயும்
வாய் மட்டும் ஓயாது!
'பற முண்ட"ன்னு
சிம்பொடித்துஅடிப்பார் கந்தர் தெருவிலேயே!
ஒரு அடை மழையில்
ஊர் புகுந்த வெள்ளத்தில்
வளர்த்த கோழி எட்டும் காணாமல் போக
'என் சொத்தே போச்சே'ன்னு
அழுது புலம்பி ஆர்ப்பரிச்சி
ஒரு நாளில் முடங்கிப் போய்ட்டா முத்தி!

முத்தி - ஊருக்கே செல்லம்.

ஊர் தூக்கிச் சென்றது பிணமாய்
பேசிற்று 'சிறுக்கி மவ, வாய் ஓய்ஞ்சிதா பாரு!
'முத்தி மேல கோவமே வந்ததில்ல யாருக்கும்.
இப்பவும் அவ திட்டுற மாதிரிஅப்பப்ப தோணும்.
சிரிப்பும் வலியும் ஒரு சேர மனசு!

அன்புட‌ன்ப‌.ம‌திய‌ழ‌க‌ன்

Friday, September 11, 2009

கவலைப்படாதே ஈழத் தமிழா

அவர்கள்
உம்மைக் கடத்திப்போய் நிர்வாணப்படுத்தி
வன்புணர்ச்சி கொள்ளும்போதும்...
கதறித் துடித்த உம் பிள்ளைகளால்
உமதாடைகளை களையச்சொல்லி
கெக்கலித்துச் சிரிக்கும் போதும்...
மொத்த மொத்தமாய் குருவிகளைப்போல
துவக்குகளால் சுட்டுக்கொன்றபோதும்...
கொத்துக்குண்டுகளைப் போட்டும்மைக்
கொன்றபோதும்....
பதறியடித்து நீங்கள்
பதுங்குக் குழிகளில் துடித்தபோதும்...
சல்லடையாய்த் துளைக்கப்பட்டு
உமதுடல்கள் தெருவெங்கும் கிடந்தபோதும்...
உமது சதைக்கறிகளை காட்சிப்படுத்தி
விற்பனைக்கு வைத்தபோதும்...
முள்வேலிகளுக்குள் நீங்கள் முடங்கிக்கிடக்கின்ற
இப்போதும்....
கோழியின் ஆசன வாயிலிருந்து
எப்படி பளிச்சென்று வெள்ளையாய்
முட்டை வருகிறதென்றும்
அதன் மேல் ரோமங்கள் இருக்கிறதெனக்
கண்டொருவர் சொல்ல
வியந்து
அதை நெடுநாட்களாகவே நீக்கும் முயற்சியில்
தேடித் தேடி ஒவ்வொன்றாய்
இழுத்திழுத்து வெளியில் போட்டு
முட்டையை
மேலும் வெண்மையாக்கிக் கொண்டிருக்கிறோம்
நானும் எமக்கான தலைவனும்.
எதுவும் கவலைப்படாதே ஈழத் தமிழாபின்னொரு நாளில்
உனைப் பார்ப்போம்.

-- அன்புட‌ன்ப‌.ம‌திய‌ழ‌க‌ன்

மீன்களைத் தொட்டியில் வைத்து பராமரிக்கிறான்

தமக்கிருக்கும் நீரின் அளவிலும்

கண்ணாடிச் சுவர்களின் விஸ்தீரணத்துக்குள்ளும்

பல வண்ணங்களில் நீந்திக் களித்து

வளைய வருகின்றன அவை

வரவேற்பறைகளை கவுரவிப்பதாகவும்

அந்த இல்லத்திற்கவை பெருமை சேர்ப்பதாகவும்

அடிக்கடி நினைத்துக்கொள்கிறான்.

அதில் பெருமகிழ்வுமுறுகிறான் அவன்.

பருத்தும் பெருத்தும் விடாத படிக்கான

சிறப்பு உணவுகளை அளித்து

அச்சிறு கூண்டுக்குள் தினப்படிக்கு

செவ்வனே நிர்வகிக்கிறான்.

கண்ணீரைக் காட்டிக் கொள்ளாத படிக்கு

நிரிலேயே அழுகையைக் கரைத்துக்கொள்கின்றன

மீன்கள்.

ஆயினும்

அச்சமும் பதைபதைப்பும் நிறைந்த

விசித்திர மனோபலத்தோடு அவற்றை

கண்காணித்துக்கொண்டிருக்கிறான் எப்போதும்

கண்ணாடிகளுடைத்தவை வெளிப்படுமோவென!

--

அன்புட‌ன்

ப‌.ம‌திய‌ழ‌க‌ன்


நனைந்து கொண்டே
தனியாய் நடக்கலாம்.
பெய்து கொண்டிருக்கிறது
மழை!

மழையின் போதெல்லாம்
மனம் விரும்புவதில்லை
குடையை...
தவிர்க்க முடியாமல்
எப்போதும்
பிடிக்கத்தான் வேண்டியிருக்கிறது.

சில சமயங்களில் தோன்றும்
முன்னெப்போதையும் விட
மழை பெய்யும் போது மட்டுமே
பூக்கள்
அழகாய் இருப்பதாய்!

வேதனைதான்
மழை பெய்யும் போதெல்லாம்
-உன் நினைப்பும் அருகில் இல்லாததும்.

மறக்கவே முடியாது
மழை பெய்த ஓர்நாளில்
நீ அழுததும்
அழுகையினூடே
விரக்தியாய் சிரித்ததும்!
பாழாய்ப்போன
வேலை எப்போது கிடைக்கும்?

லேசாய் நனைந்த
ஒரு மழை நாளில்
சற்றே விலகிய உன்
தலை முடியில் இருந்து இறங்கி...
முகம் விழுந்து... உருண்டு...
மார்பு நனைந்த ப்ளவுஸில் சில மழைத்துளிகள்...
ம்...ஒன்றுமில்லை!

உன் வருகை எதிர்பார்த்து
காத்திருப்பேன்.
என் துக்கங்களை
மேலும் தீவிரப்படுத்த
சில வேளைகளில்
மழை வந்ததுண்டு...
உனக்கு பதிலாய்!

அன்புட‌ன்ப‌.
ம‌திய‌ழ‌க‌ன்

Wednesday, September 2, 2009

மேக‌த்திலிருந்து இற‌ங்கி வ‌ந்த‌தாய்

மேக‌த்திலிருந்து இற‌ங்கி வ‌ந்த‌தாய்ச் சொன்னாய்.
வெள்ளுடை த‌ரித்து முற்றிலும் நனைந்திருந்தாய்.
ப்ர‌த்யேக‌மாய் உன‌க்கென‌ வைத்திருந்த‌ பூப்போட்ட‌ட‌வ‌ல் ஒன்றினால்துவ‌ட்டிக் கொள்ள‌ச் சொன்னேன். பிற‌கு சிரித்தாய்.
சிரிப்பினூடே க‌ண்க‌ள் க‌ல‌ங்கின‌ உன‌க்கு.
உன‌க்கென‌த் தேநீர் த‌யாரிக்க‌ச் சென்ற‌ போது
நான் ம‌ட்டும் உற‌ங்க‌வென‌ இருக்கிற‌ க‌ட்டிலிலிருந்து
த‌ள்ளி வெளியில் இருந்து க‌ற்றையாய் விழுகிற‌
சூரிய‌ வெளிச்ச‌த்தில் சுவ‌ரில் சாய்ந்து
கால்க‌ள் நீட்டி உட்கார்ந்து கொண்டாய்
சில‌ நாட்க‌ளாக‌வே பெருக்கியிராத‌ த‌ரையில்.
ப‌ர‌ப‌ர‌ப்பும், பெருவ‌லியும் தெரியும் உன்னை
சூரிய‌ ஒளி ம‌ஞ்ச‌ள் ப‌ழுப்பாய் விளிம்புக‌ள் காட்டிற்று.
துய‌ர‌ங்க‌ளை சும‌ப்ப‌து எல்லோரும்தான் என்ப‌தை நான் சொல்ல‌வில்லை.
புத்த‌க‌ம் ஒன்றினை எடுத்து வாசிக்க‌ முய‌ல்கிறேன்.
நீ எழுந்து போயிருக்க‌லாம் எப்போதேனும்.
புல்லாங்குழ‌லிசையை மிக‌ நேர்த்தியாக‌ வாசித்துக் கொண்டு
உச்சி வெய்யில் காய்ந்த‌ தெருவில்சென்று கொண்டிருந்தாள்
க‌ழைக்கூத்தாடிப் பெண்ணொருத்தி.

Thursday, August 20, 2009

இருளும் புழுக்க‌மும் நிறைந்த‌தாக‌ இருக்கிற‌து
என் வ‌சிப்பிட‌ம். எப்போதாவ‌து க‌ன‌வுக‌ளில்
யாரோ துர‌த்துகிற‌ அவ‌ல‌மும் ந‌ட‌க்கிற‌து.
ஓசித் தேநீரும், ம‌சாலா வ‌டைக‌ளும்
வ‌யிறு நிறைப்ப‌தாக‌ இருப்ப‌தோடு
ப‌ழ‌க்க‌மும் ஆகி விட்ட‌து. பேருந்திலிருந்து இற‌ங்கி
ப‌ல‌ க‌டைக‌ளையும், சாக்க‌டைக‌ளையும் தாண்டிவ‌ருவ‌து
புதிய‌வ‌ர்க‌ளுக்கு
அதிர்ச்சி த‌ர‌க்கூடிய‌ ஒன்றாக‌ இருக்க‌லாம்.
என‌க்கில்லை.
ச‌ட்டையில்லாத‌ பிள்ளைக‌ள் முக‌த்தில் ச‌ளி ஒழுக‌
குடிசைக‌ளின் வெளியிலிருக்கும்கோரைப்பாய்க‌ளில் அம‌ர்ந்து
க‌த‌றிக் கொண்டிருப்ப‌துசில‌ருக்கு எரிச்ச‌ல் த‌ர‌லாம்.
என் வாழ்வும் அது என்ப‌தால்
என‌க்கில்லை. த‌ள்ளாட்ட‌மான‌ இர‌வுக‌ளில்
தெரு நாய்க‌ள் மோப்ப‌ம் க‌ண்டு வில‌கிவிடும்.
இல‌க்கில்லாம‌ல் எப்போதும் போல‌ விடிய‌ற்காலையில்
கிள‌ம்பிவிடும் என்னை அந்த‌க்காட்சி ஈர்த்த‌து.
க‌ழிவுப்பொருட்க‌ளை இட்டு நிர‌ப்பிய‌
குப்பைத் தொட்டிய‌ருகே ஒட்ட‌ப்ப‌ட்ட‌சினிமா போஸ்ட்ட‌ரொன்றில்
ந‌மீதாவின் மார்புமீது
அழுக்குத் துணிக‌ளால் நிர‌ம்பி வ‌ழிந்த‌ ஒரு தாடியுள்ள‌ பிச்சைக்கார‌ன்
சிறுநீர் க‌ழித்துக்கொண்டிருந்தான்!

Friday, July 31, 2009

இழப்பு

ப‌ண‌ம் ச‌ம்பாதித்துவ‌ர
‌வேலைக்கான‌ புற‌ப்பாடு.
நினைவிருக்கிற‌தா,
ஆக‌ஸ்டின் முத‌ல்வார‌ம்!

நில‌வில்லாத‌ வெளிச்ச‌ இருள்.
இர‌வு
நெடுமூச்சாய் க‌றுப்பு தார்ச்சாலை.
ச‌ன்ன‌த்தூற‌லொடு சில‌போது மின்ன‌ல்க‌ள்.
குடைபிடித்து, ஒண்டி...
ம‌வுன‌ பாஷையில்
நீயும் நானும்
சுற்ற‌ம் சூழ‌!

ர‌சித்தேன்‍- உன்மேல் ஏதோ
ஒரு சுக‌ந்த‌ ம‌ண‌ம்!
'சொல்லி விட‌லாமா?'
வேத‌னையான‌ ம‌வுன‌ முக‌ங்க‌ளில்...
க‌ண்க‌ளில்...
ந‌ம் அமைதியில்...
'இப்போதேனும் சொல்லிவிட‌ வேண்டும்!'
நீ துடித்தாய்
நானும்தான்!
ஆனால்,
பேச‌வில்லை, உற‌வின‌ர்க‌ள்
ப‌ஸ்ஸேற்றி விட்டார்க‌ள்.
அத‌ற்குள் நீ...!

த‌விக்கும் ம‌ன‌து!

ச‌ட்டைப்பையில்
சில்ல‌ரைக் காசுக‌ள் இல்லாத‌
பேருந்துப்ப‌ய‌ண‌ங்க‌ளில்
முக‌த்தின் முன் யாச‌க‌த்திற்காய் நீளும்
க‌ர‌ங்க‌ளைக் கூட‌ சிலச‌ம‌ய‌ம்
த‌விர்த்துவிட‌ முடிகிற‌து.
அத‌ற்காக‌த் த‌விக்கும்
ம‌ன‌தைத்தான் ச‌மாதான‌ப்ப‌டுத்த‌முடிய‌வில்லை
எப்போதும்!

Tuesday, July 28, 2009

ஆயா

ஆயா எப்ப‌வாவ‌து ஊருக்கு வ‌ரும்.
த‌லையில‌ ஒரு மூட்டை
இடுப்புல‌ ஒரு பையி.
விடிகாலைல‌ கிள‌ம்பி
ப‌த்த‌ர‌ ப‌தினொன்ர‌ மணிக்கு வ‌ரும்.
ப‌ஸ்ஸுல‌ இற‌ங்கி ரெண்டு மைலு
ந‌ட‌ந்தேதான் வ‌ரும் வெயில்ல‌.
செருப்பாவ‌து ஒண்ணாவ‌து.
பொடி சுடுந்தான்.
பேர‌ப் புள்ளுவ‌ வூட்ல‌ இருக்கிற‌
நாயித்துக் கிய‌‌மையா பார்த்து வ‌ரும்.
அவிச்ச‌ த‌ட்ட‌ப்ப‌யிரு, ப‌ச்ச‌ப்ப‌யிரு
அப்ப‌ப்ப‌க்கி கிடைக்கிற‌
கெளாக்கா, ஈச்ச‌ம்ப‌ழ‌ம், வெள்ள‌ரிப்ப‌ழ‌ம்ன்னு
சும‌ந்து வ‌ரும்.
வெல்ல‌ம் சேத்து இடிச்சி புடிச்ச‌
ப‌ச்ச‌ப்ப‌யிருருண்டை பெரிசா அஞ்சாறு.
வேக‌வ‌ச்சி கொஞ்ச‌ம், வ‌றுத்து கொஞ்ச‌ம்ன்னு
ம‌ல்லாட்ட‌ இருக்கும் பையில‌.
"புள்ளுவ‌ ஆச‌யா சாப்புடும்"ன்னு.
எடுத்து எங்க‌கிட்ட‌ கொடுத்து
நாங்க‌ ஆச‌யா சாப்புட‌ற‌த‌ பார்த்து
ர‌சித்து சிரிக்கும் ஆயா.
செருவாடு சேத்த‌த‌ எடுத்து கொடுக்கும் என்கிட்ட‌
சுருக்கு பையில‌ அன்னிக்கே இருக்கும் 100 ரூவா.
"இந்தாய்யா . வ‌ச்சிக்க‌. ஏதாவ‌து வாங்கித் தின்னு"
வ‌ந்தா ஒரு அர‌ ம‌ணி நேர‌ம்
க‌ட்டிட்டு இருக்கிற‌ நூல் புட‌வைத் த‌லைப்பை
அப்ப‌டியே விரிச்சி
ம‌ண் த‌ரையில‌ ப‌டுத்துக்கும். அச‌தி.
"ஆடு மாடுவ‌ள‌ அப்ப‌டிஅப்டியே வுட்டுட்டு வ‌ந்தேன்
கெள‌ம்புற‌ன்யா"ன்னு சொல்லும் ம‌திய‌ம் சாப்ட‌வுட‌னே.
"ச‌ரி"ன்னு சொல்லிட்டு வெள‌யாட‌ப் போயிறுவோம்.
'ஆயாக்கு டாட்டா காட்டு'ன்னு
சொல்லி வாங்கிக்கும்.
அத்த‌னை ச‌ந்தோஷ‌ம் அதுக்கு, நாங்க‌ டாட்டா காட்டுற‌தில‌.
"ந‌ல்லா ப‌டிங்க‌"ன்னு சொல்லிட்டு போன‌ ஆயா இப்ப‌ இல்ல‌.
க‌ட‌சீயா மூஞ்ச‌க் கூட‌ பாக்க‌ முடியாம‌ப்போச்சு.
"இப்ப‌க் கூட‌ எங்க‌ள‌ நென‌ப்பியா ஆயா?!!"
- அன்புட‌ன்ப‌.ம‌திய‌ழ‌க‌ன்

ப‌ள்ளி




அய்யனார் குள‌த்த‌ருகே அமைந்திருந்த‌து.
ம‌ழை பெய்தால் ஒழுகும் கூரை.
ம‌ண் த‌ரையெங்கும் திட்டுத்திட்டாக‌
மழைநீர் தேங்கியிருக்கும்.
ப‌ள்ளி வ‌ந்த‌வுட‌ன் அள்ளிப் போட‌வேண்டும் பிள்ளைக‌ள்.
அங்க‌ங்கு திற‌ந்திருக்கும் சுவ‌ர்க‌ள்.
பெரிய‌ வாத்தியார் வீட்ல‌ருந்து பெரிய‌ பெரிய‌
சாக்குப்பைக‌ள் கொண்டுவ‌ந்து ஈர‌த்த‌ரையில் போட்டம‌ருவோம்.
கோனூர் வாத்தியார்தான் எல்லோருக்கும் வாத்தியார்.
ஒரே வாத்தியார்தான்.
வெற்றிலைப் பாக்கு
ஒன்றிர‌ண்டு வாழைப்ப‌ழ‌ம் வைத்து
எலுமிச்ச‌ மிட்டாய் எல்லோருக்கும் கொடுத்து
அக‌ல‌ப்ப‌ர‌ப்பிய‌ நெல்லில்
'அ' எழுதித் துவ‌க்கினோம் அக‌ர‌த்துப் பிள்ளைக‌ள்.
கைப்பிடித்து அவ‌ர் ம‌டிய‌ம‌ர்ந்து
அவ‌ர் சொல்ல‌ச் சொல்ல‌ ம‌ல‌ங்க‌ விழித்து
துவ‌க்கினோம் துவ‌க்க‌க் க‌ல்வியை!
காலை வ‌ந்த‌துமே பச‌ங்க‌ கூப்பிட‌த்தான் போவோம்.
ஒரு குச்சியெடுத்துட்டு அவ‌ரும் வ‌ருவார்
ஊரைச்சுத்தி.
சில‌பேரத்தான் புடிக்க‌வே முடியாது.
டிமிக்கி கொடுத்துடுவானுவ‌ ப‌ள்ளிக்கூட‌த்துக்கு.
'என்ன‌ ராமாஞ்ச‌ம், ஒம்மொவ‌ன‌ ரெண்டு நாளா காணோம்?'
''ப‌யிரு தூக்கிப் போட‌றான் வாத்யார‌, வ‌ந்துடுவான்
''உருப்ப‌ட‌ வுடுய்யா அவ‌ன‌'வாத்தியாரின் வேத‌னை ராமாஞ்ச‌த்துக்குப் புரியாது.
'எங்க‌ள‌யெல்லாம் கோனூர் அண்ண‌ன்
விட்ட‌த்துல‌ தொங்க‌வுட்டு அடிப்பாரு.
அப்ப‌வும் ப‌டிப்பேற‌ல‌ என‌க்கு' சொல்லும் முருகேச‌ன் சித்த‌ப்பா.
ஊரில் அத்த‌னை பேரையும் தெரியும் வாத்தியாருக்கு.
'எதுக்கு வாத்யார‌ அவ‌ன‌வ‌ன் பொழ‌ப்ப‌ கெடுக்குற‌'ன்னு
வாத்யார‌ ச‌லிச்சிப்பார் ம‌ளிகைக்க‌டை வெச்சிருக்கிற‌‌
வெங்க‌ட்ராம‌ செட்டியார். பெரும் நில‌புலாதிப‌தி.
ஊருல‌ கொஞ்ச‌ப்ப‌ய‌‌ ப‌டிச்சிட்டு இன்னிக்கு
உருப்ப‌டியா இருக்கான்னா கோனூர் வாத்தியார் புண்ணிய‌ந்தான்.
இப்ப‌வும் எப்ப‌வாவ‌து‌ பார்ப்ப‌துண்டு
க‌ல்யாண‌மோ இழ‌வோ என்று எதை முன்னிட்டாவ‌து
ஊருக்குப் போகையில். அவ‌ரும் வ‌ந்திருப்பார் கோனூரிலிருந்து.
க‌ச‌ங்கிய‌ வேட்டியில் த‌ள‌ர்ந்த‌ மேனியில்
கால‌ர் கிழிந்த‌ ஒரு ச‌ட்டை போட்டிருப்பார்.
"ந‌ல்லா இருக்கியா?' 'ச‌ந்தோச‌மா இருக்குப்பா
உங்க‌ள‌யெல்லாம் பார்க்கும்போது"ன்னு சொல்வார்.
"நீங்க‌ போட்ட‌ பிச்சைதான் சார்"ன்னு சொல்ல‌த் தோன்றும்.

Thursday, June 25, 2009

அதென்ன‌ வாரி?

ஆறாவ‌துக்கு ட‌வுனுக்கு போய்ட்டு ப‌டிக்க‌வேண்டியிருந்த‌து.
குடிசைக‌ளா இருக்கிற‌ என் ஊர்ல‌ருந்து ரெண்டு மைலு தொலைவு.
காலைல‌யும் சாய‌ங்கால‌மும் ந‌ட‌க்க‌ற‌து ஜாலியா இருக்கும்.
ஒரே விளையாட்டுதான் ந‌ட்புக்க‌ளோடு.
ஒத்த‌ மாட்டு வ‌ண்டி போற‌ அள‌வுக்குதான் ரோடு இருந்துச்சி.
ரெண்டு ப‌க்க‌மும் க‌ள்ளி உய‌ர‌ம் உய‌ர‌மா.
எம்ஜியார் கால‌த்துல‌தான் மொத‌ மொத‌ ரோடு போட்டானுவ‌ன்னு தோணுது.
பொட்ட‌ ம‌ண்ணு சைடுல‌ கொட்டி, (பொட்ட‌ ம‌ண்ணுன்னா செம்ம‌ண்)
ஜ‌ல்லி கொட்டி இருந்த‌து.
அதுக்கு முன்னாடி அம்ப‌ட்ட‌ன் வாரிகிட்ட‌
ரோட்ட‌ வெட்டி அதுல‌
ஒரு ம‌த‌கு க‌ட்டினாங்க‌.
அப்ப‌தான் தெரிஞ்சிது ரோடு இவ்வ‌ள‌வு அக‌ல‌மான்னு!
ந‌ட‌ந்து க‌ளைத்த‌போது அதில் உட்கார்ந்து க‌ளைப்பு தீர்ப்பார்க‌ள்
பிள்ளைக‌ளும், வ‌ழிப்போக்க‌ர்க‌ளும், சுமை தூக்கிக‌ளும்.
ச‌ற்ற‌ம‌ர்ந்து பிறகு தொட‌ரும் பய‌ண‌ம்.
அடையாள‌மா சொல்ற‌து அம்ப‌ட்ட‌ன் வாரிய‌த்தான் எல்லோரும்.
அம்ப‌ட்ட‌ன் வாரிகிட்ட‌ நில்லு.
அம்ப‌ட்ட‌ன் வாரில‌ போயி குளிச்சிக்க‌லாம்.
அம்ப‌ட்ட‌ன் வாரிகிட்ட‌ செத்த‌ ஒக்காந்துட்டு போலாம்
.... இப்ப‌டியாக‌.
அதென்ன‌ அம்ப‌ட்ட‌ன் வாரி!??
முடி வெட்ட‌ற‌ ஆள் அங்க‌ இருந்துதான் செய்வாரா?
சில‌ த‌ட‌வைக‌ளில் ம‌ட்டும் அப்ப‌டி பார்த்திருக்கேன் க‌லிய‌னை.
க‌லிய‌ன்தான் முடிவெட்டுற‌ ஆள் அப்ப‌ல்லாம் எங்க‌ ஊருக்கே.
வ‌ருச‌ம் ஒரு த‌ட‌வ‌ குத்த‌கை‌யோ மான்ய‌மோ வாங்கிப்பார் மொத்த‌மா.
எத்த‌னை த‌ட‌வ‌ வேணும்னாலும் முடி வெட்டிக்க‌லாம் வ‌ருச‌ம் பூரா.
காசுக்கு வேலையில்லை அப்ப‌ல்லாம்.
ஒரே க‌ட்டிங்தான்.
ஸ்டைலு எல்லாம் கிடையாது. அவ்ருக்கு தெரியவும் தெரியாது.
அப்ப‌ருந்தே இந்த‌ இட‌ம்தானோ? அத‌னால்தானோ இது அம்ப‌ட்ட‌ன் வாரி!தெரிய‌வில்லை. ப‌ல‌ரிட‌மும் விசாரித்த‌தில்
'தெரில‌. இருக்கும். அப்ப‌ தென‌க்கிம் இங்க‌ருந்து செய்திருக்க‌லாம்'
அத‌னால‌ வ‌ந்திருக்க‌லாம் இந்த‌ப் பேரு.
வாரில‌ த‌ண்ணி போய்ட்டு இருக்கிற‌து வ‌ச‌தியா இருந்திருக்கும்.
அப்ப‌ருந்தே தொட‌ர்ந்தும் இருந்திருக்க‌லாம்.
பின்னாட்க‌ளில் ஒரு
நில‌ப்பிர‌ச்னை விஷ‌ய‌மா
தாலுக்காபீஸ்க்கு போன‌போது
தென்னாற்காடு ஜில்லா மேப் பார்க்க‌ முடிஞ்ச‌து.
க‌ண்ணுல‌ விள‌க்கெண்ணை விட்டுப் பார்த்த‌போது
மெல்ல‌ என் ஊரையும் பார்க்க‌ முடிஞ்ச‌து. அப்ப‌டியே
நாங்க‌ ப‌ள்ளிக்கூட‌ம் போற‌ வ‌ழி..
அந்த‌ப் பேர் இருந்துச்சி இங்லீசுல‌ சின்ன‌ எழுத்துல‌.
"ஹாமில்ட்ட‌ன் கேன‌ல்"ன்னு.
ஹாமில்ட்ட‌ன் துரை கால‌த்துல‌
அந்த‌ வாரியும் ப‌ழைய‌ பால‌மும் உருவான‌ வ‌ர‌லாறு சொன்னார் அதிகாரி. அட‌, ஹாமில்ட்ட‌ன் அம்ப‌ட்ட்ன் ஆன‌ க‌த‌ தெரிஞ்சுது அப்ப‌த்தான்.