Search This Blog

Thursday, October 8, 2009


இப்படியும் அப்படியும் என்று
திரும்பித் திரும்பிப் பார்த்தான். சோம்பித் தெரியும் கைகளை
சற்று வலிமைப்படுத்தி
பார்வையை நேரமைத்து
முகத்தை லேசாய்ச் சாய்த்து
செதுக்கிய உதடுகளில் சற்று
சிரிப்பை வரவழைத்து...
என மனத்தினால்
தூரிகையைத் துன்பப்படுத்தி
எழுதிய ஓவியம்
பிடிக்காமலே போய்விட்டது கடைசீயில்.
மீண்டும் மீண்டும் அழித்தெழுதி
வரைகிறான்
ஒரு கவிதையாய் வரும் வரைக்கும்!

-அன்புட‌ன்ப‌.ம‌திய‌ழ‌க‌ன்

நதி என்று...

வற்றிய மணற்பரப்பாகவே எப்போதுமிருக்கிறது.
பேருந்துப் பயணங்களின்போது
இவற்றைக் கடக்கையில்
இதுதான் நதி என்று பிள்ளைகளுக்கு
அறிமுகம் செய்ய மனமில்லை.
நகரத்தில் சாக்கடை வடிகாலாக ...
எங்காவது தேங்கி நிற்கும் நீர் நிலைகளில்
நகரத்து வாசிகளின் உடைகளை
வெண்மையாக்கித் தருகிறான் துவைப்பவன்!
சிற்றூர்களில் கழிப்பிடங்களாக...
கரைமேலிருக்கிற வயற்பரப்புகள்
காரித்துப்புகின்றன மனித முகங்களில்.
நேற்றொரு பேருந்துப் பயணத்தில்
நதியைக் கடக்கையில்
நதியின் சாக்கடையில் நாய்கள் சில
துள்ளித்துள்ளி விளையாடிக்கொண்டிருந்தன.
நதியைப் பற்றி
நாய்களுக்கென்ன
கவலை இருக்க முடியும்?
--
அன்புட‌ன்ப‌.ம‌திய‌ழ‌க‌ன்

முத்தி என்றொரு ஆங்காரி

முத்திக்கிழவி எதற்கெடுத்தாலும் கத்துவாள்.
ஊர்க்கோடி கந்தர் ஊட்லதான்
ஒரு ஓரமாகுடியிருந்தா. பறச்சி.
காசு வருதுன்னு வச்சிருந்தார்
கந்தசாமிக்கோனார்.
பள்ளிக்கூட பசங்க கல்லெறிவாங்க அவமேல.
மானாவாரியா திட்டுவா
அப்பா அம்மா எல்லோருடையபரம்பரையும்
கரிபூசிக்கும் மூஞ்சில.
காட்டுல வறட்டி பொறுக்கி
கருப்பங்கட்ட தட்டி
காயவைப்பாள்
கந்தர் வூட்டுக்கும் சேர்த்து
பரண் கட்டி வைப்பாள்.
அப்பிய காத்தியக்கி
அலுங்காம அடுப்பெரிக்கும்
கந்தர் வூடு.
குட்டையில் மீன் பிடிப்பாள்
கருவாடு விற்பாள்
சமயத்தில் பிச்சையும் எடுப்பாள்
எழுவது வயசிலயும்
வாய் மட்டும் ஓயாது!
'பற முண்ட"ன்னு
சிம்பொடித்துஅடிப்பார் கந்தர் தெருவிலேயே!
ஒரு அடை மழையில்
ஊர் புகுந்த வெள்ளத்தில்
வளர்த்த கோழி எட்டும் காணாமல் போக
'என் சொத்தே போச்சே'ன்னு
அழுது புலம்பி ஆர்ப்பரிச்சி
ஒரு நாளில் முடங்கிப் போய்ட்டா முத்தி!

முத்தி - ஊருக்கே செல்லம்.

ஊர் தூக்கிச் சென்றது பிணமாய்
பேசிற்று 'சிறுக்கி மவ, வாய் ஓய்ஞ்சிதா பாரு!
'முத்தி மேல கோவமே வந்ததில்ல யாருக்கும்.
இப்பவும் அவ திட்டுற மாதிரிஅப்பப்ப தோணும்.
சிரிப்பும் வலியும் ஒரு சேர மனசு!

அன்புட‌ன்ப‌.ம‌திய‌ழ‌க‌ன்