ஆயா எப்பவாவது ஊருக்கு வரும்.
தலையில ஒரு மூட்டை
இடுப்புல ஒரு பையி.
விடிகாலைல கிளம்பி
பத்தர பதினொன்ர மணிக்கு வரும்.
பஸ்ஸுல இறங்கி ரெண்டு மைலு
நடந்தேதான் வரும் வெயில்ல.
செருப்பாவது ஒண்ணாவது.
பொடி சுடுந்தான்.
பேரப் புள்ளுவ வூட்ல இருக்கிற
நாயித்துக் கியமையா பார்த்து வரும்.
அவிச்ச தட்டப்பயிரு, பச்சப்பயிரு
அப்பப்பக்கி கிடைக்கிற
கெளாக்கா, ஈச்சம்பழம், வெள்ளரிப்பழம்ன்னு
சுமந்து வரும்.
வெல்லம் சேத்து இடிச்சி புடிச்ச
பச்சப்பயிருருண்டை பெரிசா அஞ்சாறு.
வேகவச்சி கொஞ்சம், வறுத்து கொஞ்சம்ன்னு
மல்லாட்ட இருக்கும் பையில.
"புள்ளுவ ஆசயா சாப்புடும்"ன்னு.
எடுத்து எங்ககிட்ட கொடுத்து
நாங்க ஆசயா சாப்புடறத பார்த்து
ரசித்து சிரிக்கும் ஆயா.
செருவாடு சேத்தத எடுத்து கொடுக்கும் என்கிட்ட
சுருக்கு பையில அன்னிக்கே இருக்கும் 100 ரூவா.
"இந்தாய்யா . வச்சிக்க. ஏதாவது வாங்கித் தின்னு"
வந்தா ஒரு அர மணி நேரம்
கட்டிட்டு இருக்கிற நூல் புடவைத் தலைப்பை
அப்படியே விரிச்சி
மண் தரையில படுத்துக்கும். அசதி.
"ஆடு மாடுவள அப்படிஅப்டியே வுட்டுட்டு வந்தேன்
கெளம்புறன்யா"ன்னு சொல்லும் மதியம் சாப்டவுடனே.
"சரி"ன்னு சொல்லிட்டு வெளயாடப் போயிறுவோம்.
'ஆயாக்கு டாட்டா காட்டு'ன்னு
சொல்லி வாங்கிக்கும்.
அத்தனை சந்தோஷம் அதுக்கு, நாங்க டாட்டா காட்டுறதில.
"நல்லா படிங்க"ன்னு சொல்லிட்டு போன ஆயா இப்ப இல்ல.
கடசீயா மூஞ்சக் கூட பாக்க முடியாமப்போச்சு.
"இப்பக் கூட எங்கள நெனப்பியா ஆயா?!!"
- அன்புடன்ப.மதியழகன்
Tuesday, July 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
அன்பின் மதியழகன்
ReplyDeleteஅருமை அருமை - ஆயா பற்றிய கவிதை அருமை - நினைப்பதில் இருக்கும் மகிழ்ச்சி சொல்ல இயலாத மகிழ்ச்சி. ஆயா எப்பொழுதும் நினைத்துக் கொண்டே தான் இருப்பார். உண்மை அதுதான்.
பேரப்பிள்ளைகளின் மேல் உள்ள அன்பு - அக்காலத்தில் இருந்த அன்பு - அடடா - இக்காலக் குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை.
நல்ல்ல கவிதை - நல்வாழ்த்துகள்