ஓடி வந்த களைப்பை
பெருமூச்செறிந்து சொன்னது ரயில்.
தீனிப்பண்டங்கள் விற்பவர்கள்
உரத்துக்கூவுகிறார்கள். வயிற்றுப் பிழைப்பு.
இனியெப்போதும் சந்திக்க வாயிப்பில்லாத
ஆயிரமாயிரம் முகங்கள்
ஏதேதோ நினைப்புகளுடன்
பிரிகின்றன நிலையத்தை விட்டு.
மாலை நேர நடையை
தொப்பைகளும், குண்டுப்பெண்களும்
வழக்கமாக்கிக் கொள்கிறார்கள்.
இருட்டிக்கொண்டு வருகிற
சூழலைப் பொருட்படுத்தாமல்
ப்ளாட்பாரத்தின் நால்வர் இருக்கையில்
அமர்ந்தபடி
கடல் கடந்த தேசத்திலிருக்கும் மகனையோ,
மகளையோ நினைத்து மனமுருகி
ஏக்கப்பெருமூச்சுகளோடு ஆகாசத்தையும்
நீண்டு போகும் தண்டவாளங்களையும்
பார்த்தபடியிருப்பார்கள்
வயதான தம்பதியர்.
அடுத்தடுத்த காட்சிகளை நோக்கி
மீண்டும் கிளம்பும் ரயில்