மீன்களைத் தொட்டியில் வைத்து பராமரிக்கிறான்
தமக்கிருக்கும் நீரின் அளவிலும்
கண்ணாடிச் சுவர்களின் விஸ்தீரணத்துக்குள்ளும்
பல வண்ணங்களில் நீந்திக் களித்து
வளைய வருகின்றன அவை
வரவேற்பறைகளை கவுரவிப்பதாகவும்
அந்த இல்லத்திற்கவை பெருமை சேர்ப்பதாகவும்
அடிக்கடி நினைத்துக்கொள்கிறான்.
அதில் பெருமகிழ்வுமுறுகிறான் அவன்.
பருத்தும் பெருத்தும் விடாத படிக்கான
சிறப்பு உணவுகளை அளித்து
அச்சிறு கூண்டுக்குள் தினப்படிக்கு
செவ்வனே நிர்வகிக்கிறான்.
கண்ணீரைக் காட்டிக் கொள்ளாத படிக்கு
நிரிலேயே அழுகையைக் கரைத்துக்கொள்கின்றன
மீன்கள்.
ஆயினும்
அச்சமும் பதைபதைப்பும் நிறைந்த
விசித்திர மனோபலத்தோடு அவற்றை
கண்காணித்துக்கொண்டிருக்கிறான் எப்போதும்
கண்ணாடிகளுடைத்தவை வெளிப்படுமோவென!
--
அன்புடன்
ப.மதியழகன்
மீன் வளர்ப்பு வெற்றிகரமான ஒன்று தான் - ஆனால் சிறைப்பறவையாய் மீன்கள் - என்ன செய்வது ... அவனுக்கிருக்கும் பயம் நியாயமானதுதான்
ReplyDeleteநல்ல கற்ப்னை - நல்ல கவிதை - நல்வாழ்த்துகள் மதியழகன்