Search This Blog

Tuesday, July 28, 2009

ப‌ள்ளி




அய்யனார் குள‌த்த‌ருகே அமைந்திருந்த‌து.
ம‌ழை பெய்தால் ஒழுகும் கூரை.
ம‌ண் த‌ரையெங்கும் திட்டுத்திட்டாக‌
மழைநீர் தேங்கியிருக்கும்.
ப‌ள்ளி வ‌ந்த‌வுட‌ன் அள்ளிப் போட‌வேண்டும் பிள்ளைக‌ள்.
அங்க‌ங்கு திற‌ந்திருக்கும் சுவ‌ர்க‌ள்.
பெரிய‌ வாத்தியார் வீட்ல‌ருந்து பெரிய‌ பெரிய‌
சாக்குப்பைக‌ள் கொண்டுவ‌ந்து ஈர‌த்த‌ரையில் போட்டம‌ருவோம்.
கோனூர் வாத்தியார்தான் எல்லோருக்கும் வாத்தியார்.
ஒரே வாத்தியார்தான்.
வெற்றிலைப் பாக்கு
ஒன்றிர‌ண்டு வாழைப்ப‌ழ‌ம் வைத்து
எலுமிச்ச‌ மிட்டாய் எல்லோருக்கும் கொடுத்து
அக‌ல‌ப்ப‌ர‌ப்பிய‌ நெல்லில்
'அ' எழுதித் துவ‌க்கினோம் அக‌ர‌த்துப் பிள்ளைக‌ள்.
கைப்பிடித்து அவ‌ர் ம‌டிய‌ம‌ர்ந்து
அவ‌ர் சொல்ல‌ச் சொல்ல‌ ம‌ல‌ங்க‌ விழித்து
துவ‌க்கினோம் துவ‌க்க‌க் க‌ல்வியை!
காலை வ‌ந்த‌துமே பச‌ங்க‌ கூப்பிட‌த்தான் போவோம்.
ஒரு குச்சியெடுத்துட்டு அவ‌ரும் வ‌ருவார்
ஊரைச்சுத்தி.
சில‌பேரத்தான் புடிக்க‌வே முடியாது.
டிமிக்கி கொடுத்துடுவானுவ‌ ப‌ள்ளிக்கூட‌த்துக்கு.
'என்ன‌ ராமாஞ்ச‌ம், ஒம்மொவ‌ன‌ ரெண்டு நாளா காணோம்?'
''ப‌யிரு தூக்கிப் போட‌றான் வாத்யார‌, வ‌ந்துடுவான்
''உருப்ப‌ட‌ வுடுய்யா அவ‌ன‌'வாத்தியாரின் வேத‌னை ராமாஞ்ச‌த்துக்குப் புரியாது.
'எங்க‌ள‌யெல்லாம் கோனூர் அண்ண‌ன்
விட்ட‌த்துல‌ தொங்க‌வுட்டு அடிப்பாரு.
அப்ப‌வும் ப‌டிப்பேற‌ல‌ என‌க்கு' சொல்லும் முருகேச‌ன் சித்த‌ப்பா.
ஊரில் அத்த‌னை பேரையும் தெரியும் வாத்தியாருக்கு.
'எதுக்கு வாத்யார‌ அவ‌ன‌வ‌ன் பொழ‌ப்ப‌ கெடுக்குற‌'ன்னு
வாத்யார‌ ச‌லிச்சிப்பார் ம‌ளிகைக்க‌டை வெச்சிருக்கிற‌‌
வெங்க‌ட்ராம‌ செட்டியார். பெரும் நில‌புலாதிப‌தி.
ஊருல‌ கொஞ்ச‌ப்ப‌ய‌‌ ப‌டிச்சிட்டு இன்னிக்கு
உருப்ப‌டியா இருக்கான்னா கோனூர் வாத்தியார் புண்ணிய‌ந்தான்.
இப்ப‌வும் எப்ப‌வாவ‌து‌ பார்ப்ப‌துண்டு
க‌ல்யாண‌மோ இழ‌வோ என்று எதை முன்னிட்டாவ‌து
ஊருக்குப் போகையில். அவ‌ரும் வ‌ந்திருப்பார் கோனூரிலிருந்து.
க‌ச‌ங்கிய‌ வேட்டியில் த‌ள‌ர்ந்த‌ மேனியில்
கால‌ர் கிழிந்த‌ ஒரு ச‌ட்டை போட்டிருப்பார்.
"ந‌ல்லா இருக்கியா?' 'ச‌ந்தோச‌மா இருக்குப்பா
உங்க‌ள‌யெல்லாம் பார்க்கும்போது"ன்னு சொல்வார்.
"நீங்க‌ போட்ட‌ பிச்சைதான் சார்"ன்னு சொல்ல‌த் தோன்றும்.

2 comments:

  1. பள்ளி கவிதை என் பள்ளி நாட்களை மீண்டும் நினைய்வு படுத்தியது இதுபோன்ற இன வரைவியல் கவிதைகளை தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  2. நல்ல இடுகை - நன்றி கலந்த உணர்வு பூர்வமான இடுகை - ஆசிரியப் பணியே அறப்பணி - அதற்கே உனை அர்ப்பணி என்ற கொள்கையினை நிறைவேற்றுவதில் தலை சிறந்தவர்கள் கிராமப்புர ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் தான்.

    நல்வாழ்த்துகள் மதி

    ReplyDelete