ஆறாவதுக்கு டவுனுக்கு போய்ட்டு படிக்கவேண்டியிருந்தது.
குடிசைகளா இருக்கிற என் ஊர்லருந்து ரெண்டு மைலு தொலைவு.
காலைலயும் சாயங்காலமும் நடக்கறது ஜாலியா இருக்கும்.
ஒரே விளையாட்டுதான் நட்புக்களோடு.
ஒத்த மாட்டு வண்டி போற அளவுக்குதான் ரோடு இருந்துச்சி.
ரெண்டு பக்கமும் கள்ளி உயரம் உயரமா.
எம்ஜியார் காலத்துலதான் மொத மொத ரோடு போட்டானுவன்னு தோணுது.
பொட்ட மண்ணு சைடுல கொட்டி, (பொட்ட மண்ணுன்னா செம்மண்)
ஜல்லி கொட்டி இருந்தது.
அதுக்கு முன்னாடி அம்பட்டன் வாரிகிட்ட
ரோட்ட வெட்டி அதுல
ஒரு மதகு கட்டினாங்க.
அப்பதான் தெரிஞ்சிது ரோடு இவ்வளவு அகலமான்னு!
நடந்து களைத்தபோது அதில் உட்கார்ந்து களைப்பு தீர்ப்பார்கள்
பிள்ளைகளும், வழிப்போக்கர்களும், சுமை தூக்கிகளும்.
சற்றமர்ந்து பிறகு தொடரும் பயணம்.
அடையாளமா சொல்றது அம்பட்டன் வாரியத்தான் எல்லோரும்.
அம்பட்டன் வாரிகிட்ட நில்லு.
அம்பட்டன் வாரில போயி குளிச்சிக்கலாம்.
அம்பட்டன் வாரிகிட்ட செத்த ஒக்காந்துட்டு போலாம்
.... இப்படியாக.
அதென்ன அம்பட்டன் வாரி!??
முடி வெட்டற ஆள் அங்க இருந்துதான் செய்வாரா?
சில தடவைகளில் மட்டும் அப்படி பார்த்திருக்கேன் கலியனை.
கலியன்தான் முடிவெட்டுற ஆள் அப்பல்லாம் எங்க ஊருக்கே.
வருசம் ஒரு தடவ குத்தகையோ மான்யமோ வாங்கிப்பார் மொத்தமா.
எத்தனை தடவ வேணும்னாலும் முடி வெட்டிக்கலாம் வருசம் பூரா.
காசுக்கு வேலையில்லை அப்பல்லாம்.
ஒரே கட்டிங்தான்.
ஸ்டைலு எல்லாம் கிடையாது. அவ்ருக்கு தெரியவும் தெரியாது.
அப்பருந்தே இந்த இடம்தானோ? அதனால்தானோ இது அம்பட்டன் வாரி!தெரியவில்லை. பலரிடமும் விசாரித்ததில்
'தெரில. இருக்கும். அப்ப தெனக்கிம் இங்கருந்து செய்திருக்கலாம்'
அதனால வந்திருக்கலாம் இந்தப் பேரு.
வாரில தண்ணி போய்ட்டு இருக்கிறது வசதியா இருந்திருக்கும்.
அப்பருந்தே தொடர்ந்தும் இருந்திருக்கலாம்.
பின்னாட்களில் ஒரு
நிலப்பிரச்னை விஷயமா
தாலுக்காபீஸ்க்கு போனபோது
தென்னாற்காடு ஜில்லா மேப் பார்க்க முடிஞ்சது.
கண்ணுல விளக்கெண்ணை விட்டுப் பார்த்தபோது
மெல்ல என் ஊரையும் பார்க்க முடிஞ்சது. அப்படியே
நாங்க பள்ளிக்கூடம் போற வழி..
அந்தப் பேர் இருந்துச்சி இங்லீசுல சின்ன எழுத்துல.
"ஹாமில்ட்டன் கேனல்"ன்னு.
ஹாமில்ட்டன் துரை காலத்துல
அந்த வாரியும் பழைய பாலமும் உருவான வரலாறு சொன்னார் அதிகாரி. அட, ஹாமில்ட்டன் அம்பட்ட்ன் ஆன கத தெரிஞ்சுது அப்பத்தான்.
Thursday, June 25, 2009
Subscribe to:
Posts (Atom)