Search This Blog

Friday, September 11, 2009

கவலைப்படாதே ஈழத் தமிழா

அவர்கள்
உம்மைக் கடத்திப்போய் நிர்வாணப்படுத்தி
வன்புணர்ச்சி கொள்ளும்போதும்...
கதறித் துடித்த உம் பிள்ளைகளால்
உமதாடைகளை களையச்சொல்லி
கெக்கலித்துச் சிரிக்கும் போதும்...
மொத்த மொத்தமாய் குருவிகளைப்போல
துவக்குகளால் சுட்டுக்கொன்றபோதும்...
கொத்துக்குண்டுகளைப் போட்டும்மைக்
கொன்றபோதும்....
பதறியடித்து நீங்கள்
பதுங்குக் குழிகளில் துடித்தபோதும்...
சல்லடையாய்த் துளைக்கப்பட்டு
உமதுடல்கள் தெருவெங்கும் கிடந்தபோதும்...
உமது சதைக்கறிகளை காட்சிப்படுத்தி
விற்பனைக்கு வைத்தபோதும்...
முள்வேலிகளுக்குள் நீங்கள் முடங்கிக்கிடக்கின்ற
இப்போதும்....
கோழியின் ஆசன வாயிலிருந்து
எப்படி பளிச்சென்று வெள்ளையாய்
முட்டை வருகிறதென்றும்
அதன் மேல் ரோமங்கள் இருக்கிறதெனக்
கண்டொருவர் சொல்ல
வியந்து
அதை நெடுநாட்களாகவே நீக்கும் முயற்சியில்
தேடித் தேடி ஒவ்வொன்றாய்
இழுத்திழுத்து வெளியில் போட்டு
முட்டையை
மேலும் வெண்மையாக்கிக் கொண்டிருக்கிறோம்
நானும் எமக்கான தலைவனும்.
எதுவும் கவலைப்படாதே ஈழத் தமிழாபின்னொரு நாளில்
உனைப் பார்ப்போம்.

-- அன்புட‌ன்ப‌.ம‌திய‌ழ‌க‌ன்

மீன்களைத் தொட்டியில் வைத்து பராமரிக்கிறான்

தமக்கிருக்கும் நீரின் அளவிலும்

கண்ணாடிச் சுவர்களின் விஸ்தீரணத்துக்குள்ளும்

பல வண்ணங்களில் நீந்திக் களித்து

வளைய வருகின்றன அவை

வரவேற்பறைகளை கவுரவிப்பதாகவும்

அந்த இல்லத்திற்கவை பெருமை சேர்ப்பதாகவும்

அடிக்கடி நினைத்துக்கொள்கிறான்.

அதில் பெருமகிழ்வுமுறுகிறான் அவன்.

பருத்தும் பெருத்தும் விடாத படிக்கான

சிறப்பு உணவுகளை அளித்து

அச்சிறு கூண்டுக்குள் தினப்படிக்கு

செவ்வனே நிர்வகிக்கிறான்.

கண்ணீரைக் காட்டிக் கொள்ளாத படிக்கு

நிரிலேயே அழுகையைக் கரைத்துக்கொள்கின்றன

மீன்கள்.

ஆயினும்

அச்சமும் பதைபதைப்பும் நிறைந்த

விசித்திர மனோபலத்தோடு அவற்றை

கண்காணித்துக்கொண்டிருக்கிறான் எப்போதும்

கண்ணாடிகளுடைத்தவை வெளிப்படுமோவென!

--

அன்புட‌ன்

ப‌.ம‌திய‌ழ‌க‌ன்


நனைந்து கொண்டே
தனியாய் நடக்கலாம்.
பெய்து கொண்டிருக்கிறது
மழை!

மழையின் போதெல்லாம்
மனம் விரும்புவதில்லை
குடையை...
தவிர்க்க முடியாமல்
எப்போதும்
பிடிக்கத்தான் வேண்டியிருக்கிறது.

சில சமயங்களில் தோன்றும்
முன்னெப்போதையும் விட
மழை பெய்யும் போது மட்டுமே
பூக்கள்
அழகாய் இருப்பதாய்!

வேதனைதான்
மழை பெய்யும் போதெல்லாம்
-உன் நினைப்பும் அருகில் இல்லாததும்.

மறக்கவே முடியாது
மழை பெய்த ஓர்நாளில்
நீ அழுததும்
அழுகையினூடே
விரக்தியாய் சிரித்ததும்!
பாழாய்ப்போன
வேலை எப்போது கிடைக்கும்?

லேசாய் நனைந்த
ஒரு மழை நாளில்
சற்றே விலகிய உன்
தலை முடியில் இருந்து இறங்கி...
முகம் விழுந்து... உருண்டு...
மார்பு நனைந்த ப்ளவுஸில் சில மழைத்துளிகள்...
ம்...ஒன்றுமில்லை!

உன் வருகை எதிர்பார்த்து
காத்திருப்பேன்.
என் துக்கங்களை
மேலும் தீவிரப்படுத்த
சில வேளைகளில்
மழை வந்ததுண்டு...
உனக்கு பதிலாய்!

அன்புட‌ன்ப‌.
ம‌திய‌ழ‌க‌ன்