Search This Blog

Sunday, April 25, 2010

கடவுளைப் பார்த்தேன்


பரபரப்பு மிகுந்த நீண்ட சாலையில்
பெருந்தவிப்புகளுக்குப் பின்
தெருமுனையில் நின்றுகொண்டே
சிறுநீர் கழித்துத் திரும்புகையில்தான்
எதிர்வந்த கடவுளைப் பார்த்தேன்.
கழுவிக்கொள்ள நீர் இல்லாததால்
அதே கையோடு அணைத்து வரவேற்றேன்.
புன்னகைத்தார் கடவுள்.  நீண்ட காலமாகக்
காணமுடியாததின் வருத்தம் தெரிவித்துப் பின்
கடந்த வாரம் பட்டினியால் இறந்த மக்களைப் பற்றியும்
உணவுப் பொட்டலங்களுக்காய்
நெரிசலில் சிக்கி இறந்த பதினேழு குழந்தைகள் பற்றியும்
பேசிய படியே நடந்து கொண்டிருந்தோம்.
எல்லாம் புள்ளி விபரங்களுடன் தெரியும் என்றார்.
தெருவோரம் கிடந்த மலங்களை மிதித்து விடாத படிக்கு
மிகுந்த கவனமுடனே என்னுடன்
வந்து கொண்டிருந்தார்.  தூரத்திலிருந்த ஒரு
பூங்காவின் இருக்கையிலமர்ந்து
ஆசுவாசம் செய்து கொள்ள முற்படுகையில்
ஏதோ இசைக்குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்தார் அவர்.
சிகரெட் ஒன்றைப் பற்றவைத்து புகைவிட்டதில்
கடவுளுக்கு கொஞ்சம்  மூச்சுத்திணறி இருமினார்.
செருமிக்கொண்டு துப்பப் போகையில்
'எச்சில் துப்பாதே' அறிவிப்புப் பலகையை சுட்டினேன்.
தவித்துப் பின் புல்வெளியிலேயே துப்பினார்.
நோய் பீடித்து வாழ்வதற்கான
எல்லாச் சாத்தியங்களையும் வைத்துவிட்டு
சமூக ஒழுக்கம் போதிக்கிற அபத்தங்களை
உணர்ந்தாரா தெரியவில்லை கடவுள்.
துண்டு விரித்து சட்டையின்றிப் படுத்துறங்கும்
ஒரு கிராமத்து முதியவரைக் கொஞ்ச நேரம்
பார்த்துக்கொண்டிருந்துவிட்டு
பொது மக்களுக்குச் சேரவேண்டியவற்றைக்
கொள்ளையடிப்பவர்களை  'தாசியின் பிள்ளைகள்'
என ஒருமுறை தான் சபித்ததாகச் சொன்னார்.
பிறகு அயர்ந்து தூங்கிப் போனார்.
நீண்ட தூக்கத்திற்குப் பின் எழுந்து
பூங்காவின் ஒரு மூலைக்குச் சென்று
சிறுநீர் கழித்தபின் 'சிகரெட் இருக்கா?' என்றார்.
அணைத்துப் போட்ட பாதி சிகரெட்டைப் பற்றவைத்து
மூன்று இழுப்புகளின் பின்
புறப்படுவதாகக் கூறினார்.
மாலை ஒரு நட்சத்திரக் கலைவிழா இருப்பதாகவும்
நாலு  மணிநேரம் அழகாய்ப் போகுமெனவும்
நான் வரமுடியுமா என்றும் கேட்டார்.
'வேலையப் பார்றா மயிரான்டி, ஓடிப் போய்டு' எனக்
காரித்துப்பினேன்.
நடுங்கிக்கொண்டு ஓட்டமும் நடையுமாய்ச்
சென்ற கடவுளின் மீது
செருப்பொன்றைக் கழற்றியும் வீசினேன்.
பிறகு கடவுளின் முதுகுபட்டு விழுந்த
செருப்பினை காலில் மாட்டிக்கொண்டு
நாளைய பிழைப்புக்கான
வேலைக்குக் கிளம்பினேன்.

--

அன்புட‌ன்
ப‌.ம‌திய‌ழ‌க‌ன்