Search This Blog

Tuesday, January 5, 2010

அம்மா எனும் ஓரு ஊழியக்காரி அல்லது குலதெய்வப்படையல்

அம்மாதான் போனை எடுத்தது.
பச்சைப்பொத்தான் அமுக்கி
வருகிற அழைப்பை
எடுக்கத் தெரியும் அம்மாவுக்கு.
"ஆருங்க பேசறது"
"அம்மா, நல்லா இருக்கியா?"
"ஆரு, பெரியவனா?"
"ஆமாம்மா, நாந்தான். நல்லாயிருக்கியா?"
"நல்லா இருக்கேம்பா, புள்ளுவ நல்லா இருக்குவளா?"
"எல்லாம் நல்லாத்தான் இருக்கோம்"
"நல்லா படிக்குதுவளா? புள்ளுவள அடிச்சி கிடிச்சி போடாத."
"அதெல்லாம் ஒண்ணுமில்ல.  நல்லாத்தான் இருக்காங்க."
"நீ ஒக்காந்து சொல்லிக்குடு புள்ளுவளுக்கு"
கீச்சுக்குரல் அம்மாவுக்கு.
"சரிம்மா"
"அதுவள ஒக்கார சொல்லிட்டு நீ எங்கயும்  போயிடாத.
அதுவளுக்கு தெரிஞ்சததான படிக்கும்.  தெரியாதத நீ ஒக்காந்து
சொல்லிக்குடு."
"சரிம்மா"
"ஒரு நட ஊருக்கு வந்துட்டுப் போயம்பா,
கொஞ்சம் அரிசி எடுத்துட்டு போயன்"
"என்னம்மா பண்ணிட்டு இருக்க?"
"இப்பத்தான் கள அரிச்சிட்டு வந்தன்.
சின்னவ இன்னும் அரிச்சிகிட்டுதான் இருக்கா.
எனக்கு முடியல.  கை நரம்பெல்லாம் பிலு பிலுன்னு இழுக்குது.
நாளைக்கு பாத்துக்கலாம்னு வந்துட்டேன்.
இன்னும் நாலு சரவம் கெடக்குது"
அம்மா இருமும்.
"உடம்பு சரியில்லியாம்மா? காசு அனுப்பட்டுமா, டாக்டர்ட்ட போயி காமி"
"அதெல்லாம் வேணாம்பா.  எனக்கு ஒண்ணுமில்ல. இருமலும் சளியும்தான். 
அஞ்சாறு நாளா காச பார்க்காம த்ம்பிதான் மருந்து வாங்கியாந்து பாக்கிறான்.  அப்பியும் நிக்கல"
"டாக்டர் கிட்ட போயிட்டு வாம்மா. இங்க வர்றியாம்மா?"
"அதுக்கு எங்க நேரம்?  சரியாய்டும்ப்பா.  இருமதான?  தம்பி வாங்கியாந்த செரப்பதான் குடிச்சிக்கிட்டு இருக்கேன். தம்பி நல்லாதான் பாத்த்துக்கிறான்.  ஊரியா தெளிக்கணும் கொல்லையில.
புழுவா கொட்டுது பயிருல.சாமி புண்ணியத்துல ஒரு மய பேஞ்சா
திரும்ப ஒருக்கா கள அரிக்கணும். இல்லன்னா பயிறு தேறாது!
இப்பல்லாம் முடியலப்பா என்னால.  குனிஞ்சி நிமுந்தா சடசடங்குது.
யப்பா.  நான் செத்தா நீ எப்ப வந்து சேருவியோ.
என் புள்ளுவள பாக்காமயே போய்டுவனோன்னு அய்வுறம்பா."
தாங்க முடியாமல் அழும் அம்மா!
"அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா.   இப்படில்லாம் யோசிக்காத"
"இல்லப்பா எனக்குத் தாங்கல.  ஒங்க மூஞ்சியப்பாக்காமலே
செத்துடுவனோன்னு.."
"மேலத்தெரு பெரிப்பா செத்துட்டாங்க, சேதி வந்துதா?"
"இல்லியேம்மா"
"ரெண்டு மாசமா ஒடம்பு முடியாம கெடந்தாங்க. செத்து நாலு நாளாச்சு. போன வெசாயக்கெயம"
ஊருக்குப்போகையில் முருகேசன் சித்தப்பா சொல்லும்.
"அந்தக் கெய்விய கொண்டு போயி டவுன்லயே வெச்சுக்கயேன் தம்பி. 
காலம் பூரா கெடந்து கஸ்டப்படுது பாரு"
அம்மா வராது எத்தனை அழைத்தும். 
காடும், மண்ணும், வயலும் மாடுமென
கழிகிறது வாழ்க்கை அம்மாவுக்கு.
எலேய் வீரனார!
ஏங் குலதெய்வமே!
சாதி விட்டு சனத்தவிட்டு
ஊரவிட்டு ஒறவ விட்டு
ஓஞ் சந்ததி
ஊரூரா சுத்தறேண்டா  காசத்தேடி.
தன்னந்தனியனா காலா காலமும்
ஆலமரத்தடில நின்னுக்கிட்டு
கத்தியும் வேலும் வாளும்
ஈட்டியும்ன்னு வெச்சுக்கிட்டு
ராத்திரி பகல்ன்னு இல்லாம
கெடா மீச ஒரு கேடு உனக்கு!
அப்பவே பேடியா இருந்திருக்கக்கூடாது நீ!

--
இது 'உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது

அன்புட‌ன்
ப‌.ம‌திய‌ழ‌க‌ன்

3 comments:

  1. அன்பின் மதியழக

    கிராமத்தில் வாழும் அம்மா - பிளைகள் பேரன் பேத்திகளின் நினைவில் வாடும் அம்மா - காணாமலேயே சென்று விடுவோமா எனக் கவலைப்படும் அம்மா - செய்யும் விவசாயத்தினைப் பற்றிய கரிசனம் - அதுதான் அமமா

    நல்ல இடுகை ரசித்தேன்
    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  2. Nalla Kavithainga... Nalla karu... Uraiydal pottikku Uraiyadal vadivilaana Kavithaiya... ? :)

    ReplyDelete
  3. நல்லாருக்கு

    ReplyDelete